ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்ல முகவரியில் இருந்த சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, ஆயிரம் விளக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வைத்யநாதன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க பல முறை மனு அளித்தும் சேர்க்கப்படாதது கண்டிக்கத்தக்கது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும்போது, சிறையில் இருந்த சசிகலாவிற்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. சசிகலா உள்ளிட்ட 19 பேரின் வாக்குரிமையை பறித்தது ஜனநாயகப் படுகொலை. எனவே, சசிகலாவிற்கு தபால் மூலம் வாக்களிக்க உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இல்லையேல், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். மேலும் இது குறித்து எங்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், 15 நாட்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார். சசிகலா தேர்தலில் நிற்கக் கூடாது என்ற காரணத்திற்காக பல்வேறு சதி வேலைகளை செய்யும் எடப்பாடி பழனிசாமி, அவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் இம்முறை மண்ணை கவ்வுவது உறுதி” என்றார்.
இதையும் படிங்க: விதிமீறும் அதிமுக! - சத்யபிரதா சாகுவிடம் திமுக புகார்!