சென்னை: எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அஇஅதிமுக நாளை (அக். 17) 50ஆவது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர். சசிகலா வருகையால் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் திரண்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே. சசிகலா, "அம்மா (ஜெயலலிதா) நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
என் வாழ்நாளில் அதிகமான நாள்களை அம்மாவுடன் கழித்திருக்கிறேன். ஆனால், அம்மாவின் மறைவை அடுத்துள்ள ஐந்து வருட காலத்தில், என் மனதில் பெரும் பாரம் பற்றிக்கொண்டது. என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மா சமாதியில் இன்று இறக்கி வைத்துவிட்டேன். அம்மாவும், தலைவரும் (எம்ஜிஆர்) என்றுமே மக்கள் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டவர்கள். தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்தை நினைத்து பயணித்தவர்கள்.
இன்று அம்மா சமாதியில் வைத்து அவரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறினேன். கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் உறுதியளித்தேன். அதிமுகவை அம்மாவும், தலைவரும் பின்புலத்தில் இருந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் துளிகளுடன் சசிகலா மரியாதை