சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியிலிருந்து அகற்றச் சதித்திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்பிய முன்னாள் இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) வினோத் ராய், நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கக் கூறுதல் வேண்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று (நவ. 2) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஆதாரமற்ற முறையில் சிஏஜி தலைவர் வினோத் ராய் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தேர்தல் பிரச்சாரம் நடத்தப்பட்டு அரசியல் ரீதியாக பாஜக பலனடைந்து ஆட்சி அமைத்தது. இதற்காக வினோத் ராய் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்மோகன் சிங்கிற்கு பிரார்த்திப்போம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் (நவ. 1) தான் அவர் வீடு திரும்பியுள்ளார். அவருக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
உத்திர பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி தலைமையில் 40 விழுக்காடு பெண்கள் போட்டியிடுவார்கள். மேலும், பஞ்சாப் தேர்தலில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தனிக் கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவின் வெற்றியைத்தான் பாதிக்கும். கேப்டன் அம்ரிந்தர் சிங் எனக்கு நல்ல நண்பன். இவர் தற்பொழுது காங்கிரஸ் மீது மனவருத்தத்தில் இருப்பதாலும், எம்எல்ஏக்கள் இடையே சிறு பிரச்சினைகள் இருப்பதாலும் அம்ரிந்தர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார்.
மோடி நல்ல மனிதர்களைச் சந்திப்பது நல்லது
சமீபத்தில், பிரதமர் மோடி வாடிகன் போப்பாண்டவரைச் சந்தித்தது நல்லது. மோடி இது போன்று நல்ல மனிதர்களைச் சந்திப்பதை நான் நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்.
உத்திர பிரதேச மாநிலத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகப் பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 2ஜி விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சிஏஜி வினோத் ராய்!