சென்னை: மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபம் ராம்சமாஜ் அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராம் சமாஜ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ராம் சமாஜ் அமைப்பின் 100 கோடி ரூபாய் முறைகேடு விவகாரங்கள் அம்பலமான நிலையில், ராம் சமாஜ் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு கடந்த மார்ச் மாத இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், ராம் சமாஜ் அமைப்பின் 100 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சமூக ஆர்வலர் எம்.வி ரமணி தனக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறுஞ்செய்தி வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66(a), 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக சமூக ஆர்வலர் எம்.வி ரமணிக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை ட்ராக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபரின் பெயர் மகேஷ் என்பதும், அவர் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதனடிப்படையில் அசோக் நகர் போலீசார் மகேஷயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மகேஷ் அயோத்தியா மண்டபத்தின் சமையல் காண்ட்ராக்டர் ஆர்டரை நீண்ட காலமாக எடுத்து நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அயோத்தியா மண்டபம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றுவிட்டதால் இனி தனக்கு உணவு ஆர்டர் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் சமூக ஆர்வலர் ரமணிக்கு குறுஞ்செய்தி வாயிலாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தாதர்-புதுச்சேரி விரைவு ரயில் தடம் புரண்டது