அரக்கோணத்திலிருந்து இன்று காலை சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் பிரசிடென்சி, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதிகயளவில் பயணம் செய்தனர்.
இந்நிலையில், ரயிலானது பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது, இரு கல்லூரி மாணவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்க முயற்சி செய்துள்ளனர், இது அங்கிருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அடுத்துவந்த நிலையத்தில் ரயில் நின்றதால், மாணவர்கள் கீழே இறங்கி தண்டவாளத்திலிருந்த கற்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கிக் கொண்டனர். இதில் அங்கிருந்த பயணிகள் மீதும் கற்கள் பட்டு ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர்.
பின்னர், இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவம் இடத்திற்கு விரைந்துவந்தனர். அவர்களைக் கண்ட மாணவர்கள் ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சிக்கியதால் காவலர்கள் அவரை கைது செய்தனர்.
பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அரக்கோணம்-சென்னை வழி செல்லும் ரயிலின் ரூட் தல பிரச்னை தொடர்பாக இரு கல்லூரி மாணவர்கள் இடையே தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் தேடிவருகின்றனர்.