சொகுசு கார்கள் தயாரிப்பில் உலகின் முதலிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒத்துழைக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து அதன் பொறியியலாளர்களுக்கு உயர் கல்வியை எளிதாக்கும் வகையில் ‘தொழில்நுட்ப உயர் ஆய்வு கட்டமைப்பை’ உருவாக்கும்.
இந்த ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவின் பொறியியல் தலைவர் ஜெயராம் பாலசுப்பிரமணியன், ஐஐடி மெட்ராஸின் அசோசியேட் டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் வி. காமகோட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய தலைவர் கிஷோர் ஜெயராமன், ஐஐடி மெட்ராஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறுகையில், “ஐஐடி மெட்ராஸுடனான தொடர்பு, இந்தியாவில் ஒத்த எண்ணம்கொண்ட கூட்டாளர்களுடன் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை மேம்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளில் மற்றொரு படியாகும்.
தொழில்நுட்பத் தீர்வுகளை நாங்கள் இணைந்து உருவாக்கக்கூடிய பகுதிகளை ஆராய எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில், எங்கள் பொறியியல் திறமைகளின் மேம்பாடு மற்றும் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயர் கல்வி, ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கும் ஐஐடி மெட்ராஸ் போன்ற ஒரு முதன்மைத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒத்துழைப்பைப் ஏற்படுத்த ஆர்வமாக உள்ளோம்” என்றார்.
பேராசிரியர் காமகோடி, “ரோல்ஸ் ராய்ஸுடனான தொடர்பு, பல்வேறு நிபுணத்துவங்களை உள்ளடக்கிய பன்முக இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகளைத் தூண்டும்” என்றார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரோல்ஸ் ராய்ஸ், ஐஐடி மெட்ராஸ் ஆகியவை நிறுவனத்தின் எதிர்கால தொழில்நுட்ப தேவைகளுக்கு மேம்பட்ட ஆராய்ச்சியைத் தொடர இலக்கு நிர்ணயிக்கும்.
தொழில்நுட்ப உயர் ஆய்வு கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ரோல்ஸ் ராய்ஸ், ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் (பி.ஹெச்.டி.) படிப்பைத் தொடர ஆர்வமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிதியுதவி செய்யும்.
ரோல்ஸ் ராய்ஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் வருடாந்திர அடிப்படை வருவாய் 15.3 பில்லியன் டாலராகும். கடந்தாண்டு ரோல்ஸ் ராய்ஸ் 1.45 பில்லியன் டாலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக முதலீடு செய்தது.
இதன் நோக்கம் ரோல்ஸ் ராய்ஸ் பொறியியலாளர்களை விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னணியில் வைத்திருப்பதும், 29 பல்கலைக்கழக தொழில்நுட்ப மையங்களின் உலகளாவிய வலையமைப்பையும் ஏற்படுத்துவதே ஆகும். இதுமட்டுமின்றி பயிற்சி, ஆள்சேர்ப்பு, பணியாளர் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளிலும் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் பத்திரம் மூலம் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டவுள்ளோம்- டி.எல்.எஃப்.