நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலை வாய்ப்புகளை பெருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 5) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
கரோனா தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியாண்டில் வரவு செலவு திட்ட முதலீட்டு மானிய ஒதுக்கீட்டில், 1,975 தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 168 கோடி ஒரு மாத காலத்திற்குள் உடனடியாக விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு 2021 - 22ஆம் நிதியாண்டில் முன்னுரிமை அளித்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவறாமல் அடைந்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர் ஆகிய பயனாளர்களின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், இறக்குமதி தொழிலுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஏதுவாக சிறப்புத் திட்டங்களை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உருவாக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபாடிக்ஸ், துல்லியமான கருவிகள் உற்பத்தி (Aerospace, Robotics & Precision Manufacturing) ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.