சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி தாக்கல் செய்த மனுவில், கட்டுமானப் பொருட்களான மணல், கற்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும்படி குவாரி உரிமையாளர்கள் லாரிகளை நிர்பந்திப்பதாகவும், அதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, அதிக அளவில் மணலை ஏற்றிச்செல்ல நிர்பந்திக்கும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதை கண்டுகொள்ளாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், இது தொடர்பாக அரசுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதைக் கட்டுப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என்றும், அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதை தடுக்காத அலுவலர்கள் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, தமிழ்நாட்டில் அதிக அளவில் மணல் மற்றும் கற்கள் ஏற்றிச்சென்றதாக எத்தனை லாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு