அரசுப் பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டார்.
இக்குழு, அரசுப் பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு கிடைத்த இடங்கள், மேலும் நீட் தேர்வில் மருத்துவ மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதற்கான மதிப்பெண் அடிப்படை போன்ற தகவல்களை மருத்துவக் கல்வித்துறை அலுவலர்களிடம் இருந்து பெற்றுள்ளது.
மேலும், கல்வியாளர்கள், பெற்றோரிடம் இருந்து கரோனா காலத்திலும், காணொலி முறையில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அறிக்கை தயாரிப்பு பணியில் இக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அறிக்கை மே மாத இறுதிக்குள் அரசிடம் அளிக்கப்படுமென கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இடஒதுக்கீடாக 15 முதல் 20 விழுக்காடு வரை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 6,000 இடங்களில், 15 விழுக்காடு எனில் 900 இடங்களும், 20 விழுக்காடு எனில் 1200 இடங்களும் கிடைக்கலாம்.
நீதிபதி கலையரசன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவை ஆலோசித்து, இந்தாண்டு முதலே மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பு வெளியாகுமெனத் தெரிகிறது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வைத்தால் கடும் நடவடிக்கை