சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், எதிர்வரும் மழைப்பொழிவை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில சராசரி 17.2 மி.மீ. ஆகும்.
மழை அளவு
ஒரு இடத்தில் மிக கனமழையும், 13 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 56.95 மி.மீட்டரும், தென்காசி மாவட்டத்தில் 48.48 மி.மீட்டரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 44.78 மி.மீட்டரும், விருதுநகர் மாவட்டத்தில் 43.05 மி.மீட்டரும், மதுரை மாவட்டத்தில் 42.21 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39.84 மி.மீட்டரும், தேனி மாவட்டத்தில் 38.20 மி.மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 36.89 மி.மீட்டரும், விழுப்புரம் மாவட்டத்தில் 33.50 மி.மீட்டரும், சிவகங்கை மாவட்டத்தில் 33.27 மி.மீ. மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
ஏரிகளின் நிலை
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,075 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதில் 2,806 ஏரிகள் 75 விழுக்காட்டுக்கு மேல் நிரம்பியுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி யில், 209.945 டி.எம்.சி இருப்பு உள்ளது. இது 93.60 சதவீதம் ஆகும்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள், மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
களத்தில் பேரிடர் மீட்புப்படை குழுக்கள்
தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களில் சென்னையில் இரண்டு குழுக்கள், திருவள்ளுரில் ஒரு குழு, காஞ்சிபுரத்தில் ஒரு குழு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் டெல்டா, இதர மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலை துறைகள் மூலம் கணக்கிடும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், 522 கால்நடைகளும், 3,847 கோழிகளும் இறந்துள்ளன. மேலும் 2,623 குடிசைகள் பகுதியாகவும், 168 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2,791 குடிசைகளும், 467 வீடுகள் பகுதியாகவும், ஏழு வீடுகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 474 வீடுகள் சேதமடைந்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட தேவாலயத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு