செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட எட்டு பேர் மனு தாக்கல்செய்துள்ளனர்.
மனுவில், "அரசு மருத்துவராகச் சேர்ந்தவர்களுக்கு 8, 15, 17, 20 ஆகிய ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறுஆய்வு செய்யும் வகையில் 2009ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படாததால், அரசு மருத்துவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் மனுவில் கோரிக்கைவைத்திருந்தனர்.
இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டை ஐந்து நாள்களில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், 2009ஆம் ஆண்டு அரசாணையை அமல்படுத்தக்கோரி, 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி மனு கொடுத்தும், ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால், வழக்குத் தொடர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த முறை உத்தரவிட்டும் அரசு மௌனம் காப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 2009ஆம் ஆண்டுமுதல் மூன்று முறை வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசின் முடிவை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது உத்தரவாகவோ அரசு வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தார்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கைவைத்தார்.
அரசாணை
இதையடுத்து, 2009ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா, இல்லையா என்பதை ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய நாளே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.