சென்னை: நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ராஜனிடம் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தாஸ் நேரில் மனு அளித்தார்.
அந்த மனுவில், "தமிழ்நாட்டில் தாய் மொழியில் கல்வி பயில்வோர் அதிகம். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களை உள்ளடக்கியது கல்வி வளர்ச்சி. எனவேதான் கல்வி முறை பலமுறைகளில் பிரிந்துள்ள நிலையில், சிபிஎஸ்இ, மெட்ரிக்குலேஷன், பன்னாட்டுக் கல்வி முறை என ஏற்றத்தாழ்வு மிகுந்த கல்வி முறைகள் உள்ளன.
2016-17ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் மருத்துவக் கனவுகள் உடைந்து, தற்கொலைகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், தேர்வு நேரத்தில் பெற்றோர் இறப்பதும் வாடிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்காக நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் அமைத்துள்ள குழு, நீட் தேர்வினை ரத்துசெய்ய பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆண்டுகள் படித்த கல்வி முறையில் உள்ள தேர்வுமுறை தேவையில்லை என்பதைப்போல், திடீரென்று தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவந்து மேலும் ஒரு தேர்வை எழுதச் செய்வது மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதன் மன அழுத்தத்தின் காரணமாக பதற்றத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். ஏழை எளிய மாணவர்களால் நீட் தேர்வு எதிர்கொள்ள முடியாது. இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தொடர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றால் மட்டுமே மருத்துவக் கனவு நிறைவேறும்.
அரசுப் பள்ளி மாணவர்களை ஏமாற்றும் நிலையில் நீட் தேர்வு திட்டம் உள்ளது. மருத்துவப்பணி ஒரு சேவைப்பணி என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
நீட் தேர்வால் பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழும் முறை தோன்றி நல்ல சமூக நோக்கம் அழியும் நிலை உருவாகும்.
தமிழ்நாடு மாணவர்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை என்பது எட்டாக்கனியாகி ஏமாற்றும் நிலையில் நீட் தேர்வுமுறை உள்ளது. எனவே நீட் தேர்வை ரத்துசெய்து மீண்டும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.