சென்னையில் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள், செவிலியர், மருத்துவத்துறைப் பணியாளர்கள் தங்குவதற்கும், உணவு உண்பதற்கும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:-
'கரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியருக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புதிதாக பதவி ஏற்றுள்ள திமுக அரசு 3 மாதத்திற்கு ஊக்கத்தொகையை வழங்கியுள்ளது. அதேபோல் கரோனா பணியில் ஈடுபட்டு மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் இறந்தால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அதிமுக அரசு அறிவித்து, அதனை ரூ.25 லட்சமாக குறைத்தது. ஆனால், அதையும் வழங்கவில்லை.
இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. அதனடிப்படையில், தற்பொழுது 43 பேரின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த குடும்ப இழப்பீட்டுத் தொகையை 25 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஏற்கெனவே கரோனா காலத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு, இறந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என வந்துள்ளது.
எனவே, அவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கான குடும்ப நிவாரண நிதியை வழங்க வேண்டும். கரோனா பணியில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்கள், செவிலியர், மருத்துவத்துறை பணியாளர்கள் தங்குவதற்கும், உணவு உண்பதற்கும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க:மண்ணில் உலவும் தேவதைகள் செவிலியர்கள்.