சென்னை எம்.ஜி.ஆர் நகர் 3-ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் முருகன் (38). இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகின்றார். இவரது மனைவி லட்சுமி( 35). இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் உள்ள குப்பன் தெருவில் கோவிந்தசாமி (62) செக்யூரிட்டியாக பணிப்புரிந்து வந்துள்ளார். இவருக்கும் செந்தில் முருகனின் மனைவி லட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் சுற்றி வந்துள்ளனர்.
இதனை பற்றி அறிந்த செந்தில் முருகன் பல முறை தனது மனைவி லட்சுமியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை மதிக்காமல் லட்சுமி கோவிந்தசாமியுடன் பழகி வந்ததால் செந்தில் முருகனுக்கும் மனைவி லட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோவிந்தசாமியின் வீட்டிற்கு லட்சுமி சென்றுள்ளார்.
இதனால் பல முறை மனைவி லட்சுமியை வீட்டிற்கு வருமாறு அழைத்து செந்தில் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு அழைத்தும் மனைவி வராததால் கோபமடைந்த செந்தில் முருகன் பெட்ரோலை கொண்டு கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.
அப்போது கதவை திறந்த போது, செந்தில் முருகன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை லட்சுமி மற்றும் கோவிந்தசாமி மீது ஊற்றிவிட்டு பற்றவைத்துள்ளார். இதனால் இரண்டு பேரும் வீட்டிற்கு உள்ளே அலறல் சத்தத்துடன் எரிந்து கொண்டிருந்துள்ளனர்.
இந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் தீயை அணைத்துள்ளனர். ஆனால் லட்சுமியின் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். கோவிந்தசாமிக்கு 60 சதவிகிதம் தீ ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செந்தில் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.