அரியலூர் மாவட்டத்தில், அரசு நிலத்தில் செயல்பட்டுவந்த தனியார் சிமென்ட் ஆலையை காலி செய்யும்படி மாவட்ட சார் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், சிமெண்ட் ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து இரு அலுவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, "நீர்நிலையை தனியார் ஆலைக்கு குத்தகைக்கு வழங்க அரசாணை பிறப்பித்தது மூலம், இரு அலுவலர்களும் இந்தியாவின் ஜமீன்தார்கள்போல இமய மலையையும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் குத்தகைக்கு விடலாம் என்ற வகையில் செயல்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவை ரத்து செய்ய மறுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கவும் நீதிபதிகள் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தபால் வாக்குக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு