சென்னை: கரோனா, ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தி அதற்குண்டான பணிகளை அரசு தீவிரமாகச் செயல்படுத்திவருகிறது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 9இல் அதனைச் செயல்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். எப்போதும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தையில் அசைவப் பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.
ஆனால் தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக காசிமேடு மீன் சந்தையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணி வரை மீன் இறக்கும் தளத்தில் மொத்த வியாபாரிகள் மீன் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய மீன் விற்கும் இடத்தில் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுக நுழைவு வாயிலில் வியாபாரிகளும், பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் முகக் கவசமும், சானிடைசரும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன் வியாபாரிகளுக்கு கடந்த ஊரடங்கின்போது வழங்கப்பட்ட பாஸ்களே செல்லும் எனவும், புதிய பாஸ் தேவைப்படுபவர்கள் மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், துறைமுக நுழைவு வாயிலில் ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான பாஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Covid Guidelines: காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்