பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும்போது பல அரசியல் தலைவர்களை அவர் எடுத்த பேட்டி பலத்த வரவேற்பைப் பெற்றன.
அதேசமயம் அந்த பேட்டிகள் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தன. சமீபத்தில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத்கூட, 'ரங்கராஜ் பாண்டேயால்தான் அதிமுகவில் எனது பதவியை இழந்தேன்' என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே ரங்கராஜ் பாண்டே திடீரென தனது பணியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து அஜீத்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும், மேடையிலும் அவர் பேசிவருகிறார்.
இந்நிலையில், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சமூக வலைதளங்களில் 'சாணக்கியா' என்ற புதிய சேனலை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2024ஆம் ஆண்டுக்குள் இந்திய அளவில் சாணக்கியா சேனலை பல மொழிகளில் உருவாக்க இருக்கிறேன் என்றார்.