கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த இடங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் இன்று (செப்டம்பர் 21) தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தனர்.
கே.பி. முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் 2ஆம் தேதிவரை இருந்தது. ஆனால், ஆர். வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022 ஜூன் 29ஆம் தேதிவரைதான் இருந்தது.
எனவே, இத்தேர்தலில் கே.பி. முனுசாமியின் இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கனிமொழி ஐந்தாண்டு கால பதவியையும், வைத்திலிங்கம் இடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ராஜேஸ்குமார் எட்டு மாத கால பதவியையும் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்த நிலையில், இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது.
மேலும் மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு இடம் என தற்போது மொத்தம் ஏழு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அக்டோபர் 4ஆம் தேதியும், அக்டோபர் 6ஆம் தேதி புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
இதையும் படிங்க: நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் - குழு அமைத்து அரசாணை வெளியீடு