இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிகார் முதல் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிவரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை) வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியகுமாரி மாவட்டங்களில் ஏப்ரல் 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.