கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதுச்சேரியில் ஊரடங்கை கடுமையாக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சம்பத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக அரசுக்கு மனு அளித்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மரணங்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஊரடங்கை கடுமையாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் நீதிமன்றம் அரசின் பணிகளைச் செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர். அதேசமயம், மனுதாரரின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.