சென்னை: எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குழந்தைகளின் நலன் குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தோம். இன்புளுயன்சா காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது.
தமிழ்நாட்டில் 282 குழந்தைகள் ஹச்1 என்1 என்று சொல்லக்கூடிய இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பருவமழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக இது உலகளவில் வரக்கூடியது.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 129 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இதில் யாருக்கும் ஹச்1 என்1 இல்லை. 8 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும், 121 பேருக்கு சாதாரண காய்ச்சல் தான். ப்ளு காய்ச்சல், இருமல், தும்மல் ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இருமல், தும்மல் நீர்திவளைகள் மூலம் காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவும்.
இரண்டாண்டுகளாக இது அதிகம் பரவாமல் இருக்க நாம் கரோனா விதிமுறைகளை கடைபிடித்தது தான் காரணம். ஆனால், இன்று அது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிப்பது அவசியம். காய்ச்சல் உள்ளவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டு இருப்பது நல்லது.
2 முதல் 3 வயது குழந்தைகள் வைத்திருக்கக்கூடிய பெற்றோர்கள், குழந்தைக்கு உடல் நலக்குறைவு இருப்பின் மற்ற குழந்தைகளை சற்று தள்ளி இருக்க வைப்பது நல்லது.
மருத்துவர் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களுக்கும் சரியான மருத்துவ ஒப்புகைச்சீட்டு இல்லாமல் மருந்துகளை கேட்டால் மருந்துக்கடைகள் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹச்1 என்1, டெங்கு என எதுவாக இருந்தாலும் எந்த மாவட்டமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கவேண்டும்.
தமிழகத்தில் 243 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கை இருப்பில் உள்ளது.
டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 19313 பேர் உள்ளனர். 15853 புகை இயந்திரம் மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
பொதுமக்கள் காய்ச்சல் குறித்து பெரியளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. பலவகையில் காய்ச்சல் ஏற்படுகிறது. அதனை தரம் பிரித்து மருந்து கொடுப்பது அவசியம். காய்ச்சல், இருமல், தும்மல், உடல் வலி, தலைவலி இருப்பின் மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
காய்ச்சல் 3-5 நாட்களில் சரியாகி விடும். அச்சம் கொள்ளதேவையில்லை. தேவைற்ற வதந்திகளை பரப்பவேண்டாம். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 837 படுக்கைகளில், 637 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 129 பேர் காய்ச்சல் காரணமாகவும், 18 பேர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் யாருக்கும் ஹச்1 என்1 இல்லை.
பொதுமக்கள் தங்களின் வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்திட வேண்டும். குழந்தைகளை கொசு வலையில் படுக்கவைப்பது, கதகதப்பாக வைப்பது உள்ளிட்டவற்றை நாம் மேற்கொள்ளவேண்டும் " என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலை உணவுத் திட்டம்: சலுகை, தர்மம், இலவசம் என யாரும் எண்ணக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்