தருமபுரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "வெள்ளாலப்பட்டி, பொம்முடி, துரிஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் மஞ்சள் விவசாயத்தை கிணற்று பாசனம் மூலமாக செய்து வருகின்றனர். கடும் வறட்சி காரணமாக கிராம மக்களே இணைந்து 4 கி.மீ சுற்றளவில் உள்ள நீர் ஆதாரங்களை தூர்வாரி விவசாயம் செய்து வந்தனர். போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததால், விவசாயத்தை நம்பிய மக்கள் மாற்று வேலைக்குச் செல்ல தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், துரிஞ்சிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி கிராம பஞ்சாயத்து சார்பாக நீர் ஆதாரங்களில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிதண்ணீர் கிடைத்து வரும் நிலையில், குடிநீர் வசதிக்காக தோண்டப்படுவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிப்பதன் மூலமாக மக்களுக்கு தேவையான குடிநீரை பெற முடியும். அதனால் அரசு மற்றும் தனியார் சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை தோண்ட தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பொறுப்பு