இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், "ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை கவனத்துடன் பரிசீலிக்க உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பாலம் கட்டும் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக எம் சான்டை பயன்படுத்தலாம் என்றும் தரத்தைப் பொருத்த வரையில் கண்காணிப்பு பொறியாளர், தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.