சென்னையில் உள்ள 'மெட்ராஸ் கிளப்' கேளிக்கை விடுதிக்குள் அதன் உறுப்பினர்களும் விருந்தினர்களும் மதுபானங்களைக் கொண்டுவரக் கூடாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை ஆணையர் 2010ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 'மெட்ராஸ் கிளப்' கேளிக்கை விடுதி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், ‘மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை ஆணையர், விதிகளைச் சரியாக ஆராயாமல் மதுபானங்களைக் கேளிக்கை விடுதிக்குள் கொண்டு வரக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார். வெளியில் வாங்கும் மதுபானங்களைக் கேளிக்கை விடுதிக்குள் எடுத்துவரக் கூடாது என விதிகள் தடை செய்யாத நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தனிநபர் மது அருந்துதல் விதிகளின்படி, இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானம் 4.5 லிட்டர், வெளிநாட்டு மதுபானம் 4.5 லிட்டர், பீர் 7.8 லிட்டர், ஒயின் 9.0 லிட்டர்கள் மதுபானங்களைத் தனிநபர் வைத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. இந்த விதிகளின்படி ஆணையரின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
'மெட்ராஸ் கிளப்' கேளிக்கை விடுதியின் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் வெளியில் வாங்கும் மதுபானங்களைக் கேளிக்கை விடுதிக்குள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.