அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட அடக்குமுறையை அமமுக வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தையே அதிர வைத்திருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் எடப்பாடி.பழனிச்சாமி அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சந்தேகத்தை அதிகப்படுத்தி வருகின்றன.
கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ஆன பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர்களை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு 100% தொடர்பில்லை என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி கொடுத்த பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் புதிய வீடியோக்கள் வெளியாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
மர்மங்கள் நிறைந்த பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் உண்மை குற்றவாளிகளை பிடிப்பதை விட்டுவிட்டு பழனிச்சாமி அரசு காவல்துறையை ஏவி மாணவர்களை தாக்குவது, கல்லூரிகளை மூடுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவர்களிடம் அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. மாணவர்களுக்காக போராடும். பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.