சட்டப்பேரவை தேர்தலில் பறக்கும் படையினருடன் பணிபுரியும் காவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது, அதில் சோதனையின்போது காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதில், “பறக்கும் படையில் உள்ள அலுவலர்கள் உத்தரவின்றி காவலர்கள் தன்னிச்சையாக சோதனையில் ஈடுபடக்கூடாது என்றும் வாகன சோதனை மற்றும் பிற சோதனைகள் நடைபெறும்போது காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. சோதனையின்போது காவலர்கள் கட்டாயம் முழு சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் பண விநியோகத்தை தடுக்க அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் தீவிரமாக வாகன தணிக்கை நடத்திவருகின்றனர். காவலர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். திறந்தவெளி லாரிகள், வாகனங்களில் வரும் பொருள்கள், நவீன முறையில் கண்ணாடி அமைத்து சோதனை செய்தும், அனுமதியின்றி வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் கட்டப்படுவதை அகற்றியும், பயணிகளின் பைகள், காய்கறி வண்டிகள் என அனைத்தையும் சோதனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.