சென்னை: கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸ் உள்ளே பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ஜனவரி 6ஆம் தேதி இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ரோந்துப் பணி காவலர்கள் ரேஸ் கோர்ஸ்க்குச் சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பாபநாசம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, சின்னதுரையும், அவரது நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரி செல்வமும் குரோம்பேட்டையில் உள்ள சார்லஸ் என்பவர் வீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, தனியார் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
காவல் துறையினர் சோதனை
சின்னதுரையிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு மாரி செல்வமும், சார்லஸும் மது அருந்திக்கொண்டிருந்தனர். பின்னர் காவல் துறையினர் அந்த அறையை சோதனையிட்டனர்.
சோதனையில் மாரி செல்வத்துக்கு சொந்தமான பையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர் நாட்டுத் துப்பாக்கி குறித்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, செங்கோட்டையைச் சேர்ந்த சின்னதுரையின் நண்பரான தீபுவின் தந்தை முன்னாள் வனத்துறை அதிகாரியாக இருந்தவர் எனவும், அவர்களது வீட்டிற்குச் சென்றபோது தீபு நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதனை தங்களுக்கு வேண்டும் எனக்கூறி வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக சென்னை வந்ததும் நாட்டுத் துப்பாக்கியை குரோம்பேட்டையில் உள்ள சார்லஸின் வீட்டில் வைத்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் அதை பெற்றுக்கொண்டு தனியார் விடுதிக்கு வந்து சின்னதுரையும், மாரி செல்வமும் நாட்டுத் துப்பாக்கியை உடமைகளுக்குள் பதுக்கி வைத்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
கிடுக்கிப்பிடி விசாரணை
அதனைத் தொடர்ந்து துப்பாக்கியின் தோட்டாக்கள் அவர்களிடம் உள்ளதா என்பதை சோதனை செய்த போது தோட்டாக்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியபின் அம்மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக காவல் துறையினர் விசாரணையில் மாரி செல்வம் (29) மீது கரிவலம் காவல் நிலையம் மற்றும் சிவகிரி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சின்னதுரை (32) மீது தென்காசி, குற்றாலம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மற்றொரு நபரான சார்லஸ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இல்லையென்றாலும் இம்மூவரும் கூட்டு சேர்ந்து குற்றச் சம்பவத்திற்கு திட்டம் தீட்டி நாட்டுத் துப்பாக்கியுடன் தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்தனரா என காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் புதிதாக 280 பேருக்கு கரோனா உறுதி