2013 இந்து முன்னணி பிரமுகர் கொலை
சென்னை அம்பத்தூரில் 2013ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு, ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்த வழக்கு என இரு வழக்குகளில் முன்னிலையாகாமல் தலைமறைவாக உள்ள காஜா மொய்தீன், நவாஸ், அப்துல் சமீம் ஆகிய மூன்று பேரை தமிழ்நாடு காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
பின்னர் தலைமறைவாக இருந்த இவர்கள் தமிழ்நாடு, தென்னிந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததால், மாநிலம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.
பெங்களூருவில் 3 பேர் கைது
இரண்டு மாத காலமாக இவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சில தினங்களுக்கு முன்பு இவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி இரண்டு நபர்களைப் பிடித்து சென்னைக்கு வெளியே வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த முகமத் அனிப் கான், இம்ரான் கான், முகமது சையத் ஆகிய மூன்று பேருக்கு இக்கொலை வழக்கில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது. மேலும் இவர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதை அறிந்த சிறப்புப் புலனாய்வு காவல் துறையினர் விரைந்துசென்று அவர்களைக் கைதுசெய்தனர்.
தொடர்ந்து, இவர்கள் மூன்று பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் காஜா மொய்தீன், நவாஸ், சமீம் ஆகிய மூன்று பேரும் தப்பிப்பதற்கு உதவி செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கி பல்வேறு மாநிலத்தில் உள்ள பயங்கரவாதிகளுக்கு சப்ளை செய்துவந்ததும் தெரியவந்தது.
பின்னர் இவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு உதவிபுரிந்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட போலி சிம் கார்டுகள், மூன்று துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் இவர்கள் மூன்று பேரையும் சிறப்புப் புலனாய்வு அமைப்பினர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மென்பொருளை உருவாக்கி பயங்கரவாதிக்கு உதவிய மாணவர் கைது
உதவி ஆய்வாளர் கொலை
இச்சூழலில், நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை இரண்டு நபர்கள் கத்தியால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றனர். தொடர்ந்து, தப்பிச்சென்ற கொலையாளிகளின் கண்காணிப்பு படக்கருவியின் காட்சியை காவல் துறையினர் வெளியிட்டனர்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை - குமரியில் பரபரப்பு..!
அந்தக் கொலையாளி அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீம் என்பது தெரியவந்தது. மேலும் இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் உள்பட மூன்று பேரை டெல்லியில் தமிழ்நாடு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
ஒரே ரக குண்டுகள்
மேற்கண்ட விசாரணையில் உதவி ஆய்வாளரின் உடலில் துளைத்த குண்டும் நேற்று முந்தினம் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்ட இம்ரான் கான், அலிப் கான் ஆகியோரிடமிருந்து கைப்பற்ற துப்பாக்கியில் உள்ள குண்டும் ஒரே ரகம் எனத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் இது தொடர்பாக பெங்களூருவில் கைதுசெய்யப்பட்ட அனிப் கான், முகமது சையது உள்பட மூன்று பேரை சிறப்புப் புலனாய்வுக் காவல் துறையினர் விசாரணைக்காக காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.