கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன், தொகுப்பாளர் சுரேந்தர், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், படத்தொகுப்பாளர் குகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில், செந்தில்வாசன் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் சைபர் கிரைம் காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாலும், அவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாலும், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கறுப்பர் கூட்டம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தால் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும், காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோதே போதிய விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிலரின் உத்தரவுக்கு ஏற்ப வழக்கின் விசாரணைப் பிரிவுகளை மாற்றுவதற்காக உள்நோக்கத்துடன் காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்துள்ளதால், நீதிமன்றம் அனுமதி வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, சுரேந்தர் மற்றும் செந்தில்வாசன் ஆகியோரை காவலில் எடுக்கக்கோரும் மனு மீதான தீர்ப்பை நாளை பிறப்பிப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க: மக்களின் மரணத்தை மறைத்த முதலமைச்சர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - ஸ்டாலின்