சென்னையில் பெய்த கனமழை காரணமாக புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 7 நாள்களாக மழை நீரானது தேங்கியும், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இதனைக் கண்டித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே நேற்று (நவ.14) நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்ட்ரஹான்ஸ் சாலை, பேரக்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அத்துமீறி தடுப்புகளை அகற்றிவிட்டு செல்ல முற்பட்டனர்.
பெண் காவலருக்கு மிரட்டல்
இதனைக் கண்ட போக்குவரத்து காவலர் உமா மகேஷ்வரி, மாற்று பாதையை பயன்படுத்துமாறு அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண் காவலரிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த மற்றொரு காவலர் சமாதானம் செய்து அவர்களை அனுப்பிவைத்தார். பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பினர். இது தொடர்பாக பெண் காவலர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் துறை விசாரணை
இந்தப் புகாரின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயப்படுத்தும் செயல்புரிதல், பணிசெய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சதீஷ், விவேக்பாபு என்பது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்பத்தூர் நீதிமன்றத்தில் காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை