சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலை வேப்பேரியில் உள்ள மணியம்மை சிலைக்கு, மர்ம நபர் ஒருவர் புடவை அணிவித்து அவமரியாதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.அதன் பேரில் எழும்பூர் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணை
முதற்கட்டமாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், காலை 11:15 மணியளவில் கருப்பு வேட்டி, அழுக்குச் சட்டை அணிந்து கையில் புடவையுடன் வரும் நபர், மணியம்மை சிலை அமைந்துள்ள பகுதியை முற்றிலுமாக சுத்தம் செய்து பிறகு அந்தப் புடவையை மணியம்மை சிலையைச் சுற்றி கட்டி விட்டு பின்னர் இறங்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
![மணியம்மை சிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14017920_917_14017920_1640543768984.png)
இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான நபர் குறித்து அந்தப் பகுதியில் விசாரணை செய்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கையில் புடவையுடன் அந்தப் பகுதியில் இன்று காலை முதலே ஒரு நபர் சுற்றித் திரிந்ததாக அப்பகுதியில் கடை வைத்திருந்தவர்கள் கூறி உள்ளனர்.
இதையடுத்து, அந்நபரை கைது செய்ய வேண்டி அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மணியம்மை சிலை அமைந்துள்ள அதே பகுதியில் சற்று தூரம் தள்ளி நடைமேடையில், சிசிடிவி காட்சியிலிருந்த நபருடன் ஒத்துப்போகும் அளவில் ஒருவர் படுத்திருந்தார்.
![மணியம்மை சிலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-maniammaiissue-arrest-photo-script-7208368_26122021184346_2612f_1640524426_934.jpg)
மனநலம் பாதிப்பு
அவரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரணை செய்ததில், அவர் பெயர் கன்னியப்பன் என்றும் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தனது அம்மா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் காவல் துறையினரிடம் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஏன் சிலைக்கு புடவை அணிவித்தார் என காவல் துறையினர் கேட்டபொழுது, சிலை கறுப்பாக இருந்ததால் சிலை எந்தவித ஆடையும் அணியாமல் இருந்தது போல் தெரிந்ததாகவும், அதை மறைக்க வேண்டியே புடவை கட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை காப்பகத்தில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Late Tamil Director SP Jananathan's statue Ceremony: கரோனா திட்டமிட்ட சதி எனக்கூறியவர் எஸ்.பி.ஜனநாதன் - திருமாவளவன்