தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் 8 ஆயிரத்து 888 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாய்ப்பின்றி இருந்தனர். இந்த நிலையில், தற்போது கரோனா காலம் நிலவி வருவதால் 2020ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து 2019ஆம் ஆண்டு தேர்ச்சி அடைந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், "2019ஆம் ஆண்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி அடைந்து, காலிப் பணியிடங்கள் போக, வேலை வாய்ப்பின்றி மீதமுள்ள அனைவரையும் தற்போது அறிவிக்கப்பட்ட காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அனைவரும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்விலும், உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிலும் தேர்ச்சி பெற்று, மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் போக பின்தங்கியவர்கள் தோல்வியடைந்தவர்கள் அல்ல.
எங்களுக்கு இந்த ஆண்டு அரசு நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் வாய்ப்பளித்தால், மருத்துவ பரிசோதனை மட்டும்தான் நடைபெறவேண்டும். தற்பொழுது கரோனா காலம் நிலவி வருவதால் புதியதாக ஆள் தேர்வு நடத்துவது என்பது சாத்தியமற்றது. எனவே, அனைத்து தகுதிகளும் பெற்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்றனர்.