சென்னை: தேனாம்பேட்டையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் நண்பர் வீட்டில் சென்று பணம் செலவழித்து ஆன்லைனில் ஃப்ரீ பையர் (free fire) விளையாட்டை விளையாடி வந்துள்ளனர்.
இதனைப்பற்றி அறிந்த அவ்வீட்டிலிருந்த பெண்மணி, சிறுவர்களிடம் பணம் செலவழித்து ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதை சிறுவர்களின் பெற்றோர்களிடம் தெரிவிப்பதாக மிரட்டியுள்ளார்.
சிறுவர்களை ஏமாற்றிய பெண்
இது பற்றி பெற்றோரிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் , அவர்களின் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தருமாறும், அப்பணத்தில் சிறுவர்களுக்கு தேவையானதை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
இதனால் சிறுவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 8 லட்சம் பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் மடிக்கணினி வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர். அப்பெண்ணும் சிறுவர்களுக்கு ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான இரண்டு மடிக்கணினிகள் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சிறுவர்களின் தந்தை, மடிக்கணினியைப் பார்த்து எப்படி உங்களுக்கு இவை கிடைத்தன என்று கேட்டதற்கு, சிறுவர்கள் சரியாக பதிலளிக்காததால், சந்தேகமடைந்த தந்தை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
காவல் துறையினர் விசாரணை
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சிறுவர்களை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடாமல் தடுப்பது பெற்றோர்களின் கடமை என்றும், அதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை