சென்னை: எழும்பூர் பகுதியை சேர்ந்த நசீர்கான் என்பவர் அண்ணாசாலையில் சிட்டி அண்ட் கம்பெனி ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் அண்ணாசாலையை சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு(செப்.29) கடை உரிமையாளரின் நண்பரான சேத்துப்பட்டை சேர்ந்த முகமது ஷேக் என்பவரிடம் ரூ.29 லட்ச ரூபாய் கொடுத்து வரும்படி சந்தோஷ் மற்றும் கமலகண்ணனிடம் உரிமையாளர் நசீர் பணத்தை கொடுத்துள்ளார். இருவரும் கைப்பையில் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வரும் போது, சேத்துப்பட்டு குருசாமி பாலம் அடியில் நின்று கொண்டிருந்த நான்கு பேர் திடீரென இவர்களை வழிமறித்து உள்ளனர்.
பின்னர் தாங்கள் போலீஸ் என கூறி, பையில் கஞ்சா கடத்துகிறீர்களா எனக்கூறி பணப்பை மற்றும் இரண்டு செல்போன்களை அந்த நபர்கள் பறித்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விசாரிக்க வேண்டும் காவல் நிலையம் வருமாறு அழைத்த போது சந்தோஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் செல்ல மறுத்ததால் அவர்களின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு அந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரிடம் தெரிவித்த போது போலி போலீஸ் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த இவர்கள் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸ் போல் நடித்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்ற சார்பதிவாளர் உள்பட இருவர் கைது