மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் ’வேதா நிலையம்’ இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடை கோரி சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது, அந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது.
வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூன் 8இல் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் வேதா இல்லம்