இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சமூகநீதியை சிதைக்கக் கூடிய இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு, சமூகநீதி தொடர்பான வழக்குகளில் எதிர்மறையான தீர்ப்புகளையே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கிவருகின்றன. இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒருபுறமிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை தவறாக புரிந்து கொள்வது தான் இதற்கு காரணம் ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பிரிவுகள் மூன்றாவது பகுதியில்தான் இடம்பெற்றுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பகுதியே அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது. இடஒதுக்கீடு என்பது மக்களின் உரிமை என்பதற்கு அது அரசியல் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் இடம் பெற்று இருப்பதே போதுமானதாகும்.
கடந்த காலங்களில் இடஒதுக்கீடு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் எதிர்மறையான தீர்ப்புகளை வழங்கியபோதெல்லாம் மத்திய அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில்லை. மாறாக, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து சமூகநீதிக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதேபோல், இப்போதும் இடஒதுக்கீட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்து இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கி, மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த வேண்டும். அதேபோல், இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டம் நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிகமாக அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்கவேண்டும்" என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.