இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-21ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏற்கனவே அறிவித்தவாறு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறது. இச்சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும்.
கரோனா அச்சத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவர்களால் அமைதியாகவோ, மனதை ஒருமுகப்படுத்தியோ தேர்வு எழுத முடியாது. இதற்கெல்லாம் மேலாக மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை. தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கைவிட்டு, 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அரசு நடத்த வேண்டும்.
ஒருவகையில் பார்த்தால் நீட் தேர்வை நடத்துவதே தார்மீக நெறிகளுக்கு எதிரானதாகும். நீட் தேர்வு செல்லாது என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் அமர்வு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெறுவதாக அறிவித்தது. ஆனால், அதற்கான காரணம் எதையும் கூறாமல், நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
அதன்பின் 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும், முதன்மை வழக்கை விசாரிக்காமல், நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல. நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கை விரைந்து விசாரித்து, அவ்வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வழக்கு தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவில் காட்டும் அலட்சியம் வெட்டுக்கிளியிலும் வேண்டாம் - மு.க.ஸ்டாலின்