அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மாதம் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், மீண்டும் பணி அமர்த்தலாம் என நேற்றைய ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல், ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். இந்த முடிவு அநீதியானது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 40 விழுக்காடு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு துணைவேந்தர் சூரப்பா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்குத்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.
துணைவேந்தருக்கும், பல்கலைக்கழக உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் நெருக்கமான பேராசிரியர்களுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. சமூகநீதிக்கும் எதிரான இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான போக்கு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அப்பல்கலைக்கழகம் சீரழிவதைத் தடுக்க முடியாது. எனவே, ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முடிவை கைவிடும்படி துணைவேந்தர் சூரப்பாவுக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். ஆட்சிக்குழுவை வலுப்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’ஹஜ் பயணத்திற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும்’ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்