ஊரடங்கு ஆணை எப்போது நிறைவுக்கு வரும், அடித்தட்டு மக்களுக்கு எப்போது வாழ்வாதாரம் கிடைக்கும்? என்பவையெல்லாம் விடைதெரியாத வினாக்களாக நீடிக்கும் நிலையில், சில வகை தொழிலாளர்களின் வறுமை முடிவின்றி நீடிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக 17 வாரியங்கள் உள்ள நிலையில், 15 வாரியங்களைச் சேர்ந்த 14.70 லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டும் அரசின் சார்பில் 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம் சார்ந்த பணிகளைச் செய்யும் எந்தத் தொழிலாளர்களுக்கும் நலவாரியம் அமைக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு அரசிடமிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதேபோல், முடித்திருத்தும் தொழிலாளர்களும் ஊரடங்கால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கென தொழிலாளர் நலவாரியம் இருப்பதால் அவர்களுக்கு இருமுறை 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 50 நாள்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீக்கப்பட்டாலும்கூட, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியைப் போன்று இன்னும் சில மாதங்களுக்கு பின்பற்றப்படக்கூடும். அதுவரை திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுடன் மிகவும் எளிமையாகவே நடத்தப்படும்.
அதேபோல் முடித்திருத்தகங்கள் செயல்படுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படாது. எனவே, திருமணம் சார்ந்த தொழில்களைச் செய்பவர்களுக்கும், முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் சூழலைக் கருத்தில்கொண்டு சிறப்பு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடிசைவாழ் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் - அமைச்சர் வேலுமணி அறிவிப்பு!