சென்னை புத்தகக் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட கடைகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி ஏராளமான மக்கள், நந்தனம் புத்தகக் காட்சிக்கு வெளியே விரிக்கப்பட்ட நடைபாதை கடைகளைத் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள பலரும் பழைய புத்தகங்களை தேடிச் சென்று வாங்குவர். அங்கு வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவதே தனி கலை. பெரும்பாலான நடைபாதை புத்தக வியாபாரிகளுக்கு புத்தகத்தின் உண்மையான மதிப்பு தெரியாது என்பதால் அவர்களிடம் தைரியமாக பேரம் பேசுபவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருக்கும்.

சில நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை நான்கில் ஒரு மடங்கு விலைக்கு வாங்கிய கதைகளும் நடைபாதையில் நடக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. விலை மட்டும்தான் குறைவாக கிடைக்கிறதா? இல்லை... இல்லை.... நாம் நீண்ட நாட்களாகத் தேடி அலையும் அரிய புத்தகங்களும் நடைபாதை கடைகளில் சாதாரணமாக சாலையில் கிடக்கும். இதனாலேயே புத்தக விரும்பிகள் அங்கு அதிக அளவில் படையெடுக்கிறார்கள்.
டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!
புத்தகக் காட்சிக்குள் நுழைவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் என்று அடுக்கடுக்காக கட்டணத்தை செலுத்தி உள்ளே சென்றால் புத்தகங்களின் விலை அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும்.

ஆனால் நடைபாதை கடைகளில் விலை பிரச்னையாகவே இருக்காது. புனைவு கதைகள், ஆங்கில நாவல்கள், அறிவியல், வரலாறு, பொருளாதாரம் தொடர்பான புத்தகங்கள், கணிதம், வேதியல், கணினி அறிவியல் என பாடப்புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள். சங்க இலங்கியம், பழைய தமிழ் நாவல்கள், கவிதை புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், வெளிநாட்டு புத்தகங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏதோ ஒன்று இருக்கும். பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்லும் அனைவரும் சேட்டன் பகத் புத்தகங்களையும், ராஜேஸ் குமாரின் கிரைம் நாவல்களையும் பார்க்காமல் இருக்க முடியாது.

உள்ளே புத்தகங்கள் இல்லை என்றாலும் இங்கு நாங்கள் கொடுக்கிறோம், வருபவர்களுக்கு இல்லை என்று செல்லுவதில்லை என நடைபாதை வியாபாரி ஒருவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.