தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற இயக்கத்தை மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் நெகிழிக் குப்பைகளை அகற்றும் பரப்புரை பணிகளை தென்னக ரயில்வே அலுவலர் டி.ஆர்.எம். பிரகாஷ் உள்ளிட்டோர் இன்று தொடக்கிவைத்தனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்த நெகிழிக் குப்பைகளை ரயில்வே அலுவலர்கள் அகற்றினர்.
அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.எம். பிரகாஷ், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அகற்றும் பணிகள் சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் முனையங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.