சென்னை: மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 12ஆம் தேதி ஆயிரத்து 600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் 600 மருத்துவர், 600 செவிலியர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒரு வார்டுக்கு ஒரு நிலையான தடுப்பூசி முகாமும், இரண்டு நடமாடும் தடுப்பூசி முகாம்களும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம் மூன்று லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மூன்றாயிரம் மலேரியா பணியாளர்கள், ஆயிரத்து 400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், ஆயிரத்து 400 அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
தடுப்பூசி முகாம்கள்
சுழற்சங்கம், இந்திய மருத்துவச் சங்கம், கல்லூரி முதல்வர்கள், உயர் கல்வித் துறை அலுவலர்கள், சென்னை மாவட்ட நிர்வாக அலுவலர்கள், வணிகர் சங்கப் பேரவைகள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்தச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி நோய்த்தொற்றுப் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள்விடுத்துள்ளது.
இந்தச் சிறப்பு முகாமினை ஏற்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (செப். 8) அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: செப். 12 தடுப்பூசி முகாமை தள்ளிவைக்க மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை