வடசென்னையில் நடைபெற்ற பெட்ரோல் சேமிப்பு நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’கூட்டுறவுத் துறை ஒரு பணக்காரத் துறை. கூட்டுறவுத் துறை அமைச்சர் இங்கே இருப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். இந்தப் பெட்ரோல் சேமிப்பு நிலையம் சுமார் 15,000 சதுர அடி. இதுபோக மீதம் நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நான்கு ஏக்கர் நிலத்தில் வடசென்னை ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் திருமண மண்டபம் கட்டுவதற்கு உதவ வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு மேடையிலேயே பதிலளித்துப் பேசிய செல்லூர் ராஜூ, அமைச்சர் ஜெயக்குமார் காலி இடத்தில் ஒரு கல்யாண மண்டபம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நிச்சயமாக கூட்டுறவுத்துறை நிர்வாகத்தினரிடம் தெரிவித்து அற்புதமாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் ஒரு கல்யாண மண்டபம் கட்டிக் கொடுக்கப்படும். வருகிற மானிய கோரிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கையும், செல்லூர் ராஜூவின் வாக்குறுதியும் மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.