சென்னை கொரட்டூரைச் சேர்ந்த சேகர் ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 2018ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், சிலைகடத்தல் தொடர்பாக 2012-2018 காலக்கட்டத்தில் 26 வழக்குகளைப் பதிவு செய்து, 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1,125 சிலைகள் மீட்கப்பட்டதோடு, 1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து எட்டு சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டிய மனுதாரர், அவைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள் தானா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பொன் மாணிக்கவேல் மீட்டதாக கூறப்படும் சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களிடம் ஒப்படைக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த அவர், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்ய தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'லயோலா கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் வழக்கு' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு