புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு மூன்றாம் மொழியாக இந்தியை பாடத்திட்டத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்க முயற்சிப்பது, நீட் தேர்வு என்கின்ற பெரும்சுமைகொண்ட பாடத்திட்டதேர்வு தரும் மன அழுத்தம், அதன் தொடர்ச்சியாக நிகழும் மரணங்கள் எனக் கல்வியை கற்பதில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர், இளைய தலைமுறை தமிழ் மக்கள். இருப்பினும், அவர்கள் இவற்றையெல்லாம் சகிப்புத்தன்மையோடு அறவழியில் போராட்டங்கள் வாயிலாக முன்னெடுத்து, தங்களின் அதிருப்தியை ஆளும் அரசுகளுக்கும் அதிகார மையங்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக உணர்த்தி வருகின்றனர். இதற்கெல்லாம் முன்னோடியாக, போராட்ட வேங்கையாகத் திகழ்ந்தவர் தான், பெரியார்.
அனைவருக்கும் கல்வி:
கல்வி என்பது ஒருவனுக்கு அறிவை விரிவு செய்து, அவனை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாக இருக்கவேண்டுமே ஒழிய, அவனை எந்த வகையிலும் பின்தங்கியவனாக ஆக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார், பெரியார்.
1939ஆம் ஆண்டு 'பிள்ளைகள் தந்தையின் தொழிலை பகுதிநேரமாக செய்துகொண்டே, தங்களின் கல்வியைத்தொடரவேண்டும்' என்று குலக்கல்வித் திட்டத்தை நிர்பந்தித்தார், அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ராஜாஜி. இதன்மூலம் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் படிக்கும்போது சக மாணவர்களால் சாதிய ரீதியான தாக்குதல்களுக்கோ, ஒப்பிடல்களுக்கோ ஆளாகி படிப்பை முற்றிலும் நிறுத்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, குலக்கல்வி திட்டத்தை பலமாக எதிர்த்தார், பெரியார். அதன்விளைவே அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க, சத்துணவுத்திட்டம் முதல் இலவச மடிக்கணினித் திட்டம் வரை, கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாடு அரசியலில் நடந்த பல முன்னெடுப்புகளுக்குக் காரணம். அதுவே, இங்கு பிராமணர்கள் அல்லாதவர்களும் கல்வியிலும் பணியிலும் முன்னணியில் இருக்க பிரதானமாகத் திகழ்கிறது.
சிந்தனை தமிழில் இருந்தால் நன்று:
ஒருவன் தன் தாய் மொழியில் சிந்தனை செய்தாலே அவனது கற்பனை சக்தி மேம்படும், விஞ்ஞானத்துறையிலோ பொறியியல் துறையிலோ மருத்துவத்துறையிலோ அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் சமுதாயம் வளரும் என்பதை தீர்க்கமாக நம்பினார், பெரியார். அதனால், பள்ளிகளில் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்தார். தமிழ் தேவ பாஷை அல்ல; மக்களின் மொழி என்று பகிரங்கமாக பல்வேறு மேடைகளில் முழங்கி 1948, 1952,1965 ஆகிய ஆண்டுகளில் கடும் எதிர்ப்புப் போராட்டங்களை முன்வைத்தார். அதன்விளைவே இருமொழிக்கொள்கை உடைய மாநிலமாக தமிழ்நாடு தனித்து நிற்கக் காரணம்.
அந்த விந்தையே தாய்மொழியான தமிழில் கல்வி கற்ற பல்வேறு பொறியியல் டெக்கிகளை அமெரிக்காவின் சிலிகான் வேலி வரை தலைமைப் பீடங்களில் பணியமர்த்தியுள்ளது. அதுவே, தமிழ் வழியில் பயின்று உயர்ந்த மருத்துவர்களை கரோனா காலத்திலும் திறம்பட செயல்படவைத்து, இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது.
பிராமணர்களுக்கு எதிரானவரா பெரியார்?
பொதுவாக எந்தவொருவர் மீதும் வைக்கப்படுகின்ற விமர்சனத்தில் உண்மை இருக்கும்பட்சத்தில் அது நிச்சயம் மாற்றிக்கொள்ளக்கூடியது. சீர்திருத்தம் செய்யவேண்டியது. அந்த வகையில், பிராமணர்கள் பிற சமூகத்தினரிடையே கடைபிடிக்கும் தீண்டாமையையும் மக்களை பிறப்பால் பிரிக்கும் வர்ணாசிரமக்கொள்கையையும் தான், பெரியார் பகிரங்கமாக எதிர்த்தார். கடவுளை எளிய மக்கள் கோயிலுக்குச் சென்று வணங்கவிடாமல் வைத்திருந்த அந்த கட்டமைப்பைதான் கேள்விக்கு உள்ளாக்கினார். ஆனால், பிராமணர்களை அவர் முற்றிலுமாக வெறுக்கவில்லை. இது தான் வரலாறு. அவ்வாறு இருக்கவே எதிரெதிர் கருத்துகளைக்கொண்ட ராஜாஜியும் பெரியாரும் நண்பர்களாக இருக்க முடிந்தது. இப்படிப்பட்டவரை பெரியார் பிராமணர்களுக்கு எதிரானவர் என தற்காலத்தில் சொல்லி, நடக்கும் அரசியல் பரப்புரைகளை மக்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்துக்களுக்கு எதிரானவரா பெரியார்?
1924ஆம் ஆண்டில் கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கும் ஈழவ மக்களுக்கும் கோயிலுக்குள் நுழையவும் மாட வீதிகளில் நடக்கவும் அனுமதி மறுக்கப்பட்டபோது, தங்களது தொடர் போராட்டங்களின் மூலம் அதனை மீட்டுக்கொடுத்தவர், பெரியார்.
பிராமணர்களை அல்லாதோர் கடவுளை கருவறையில் நின்று வழிபடக்கூடாது என சில ஆதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட விதிகள் இருந்தன. இன்னும் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக நடைபெறும் சாதித் தீண்டாமைகள், பெரியாரை கேள்வி எழுப்ப வைக்கின்றன. தனிப்பட்ட ரீதியில் 'கடவுள் கிடையாது' என தொடர்ந்து வலியுறுத்தும் பெரியார், ஏன் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவும் கடவுள் இருக்கிறார் என நம்பும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
இந்த இடத்தில் தான் பெரியார் மறைமுகமாக ஒன்றை வலியுறுத்துகிறார். மக்களின் மூடநம்பிக்கையை கேள்வி கேட்பது தன் பணியாக இருந்தாலும், சாதிய ரீதியாக சமமற்றவர்களாக சிலர் சீண்டல்களை சந்திக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தன் கடமை என்பதை தீர்க்கமாக வலியுறுத்துகிறார், பெரியார். அதுதான் பெரியார்.
சாதி ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, நிற ரீதியாகவோ ஒருவன் ஒடுக்கப்படும்போது, ஒருவன் கிளர்ந்தெழுந்தால் அவனுக்குள் நிச்சயம் 'பெரியார்' ஒளிந்திருப்பார். இனிய பிறந்த நாள் வணக்கங்கள் பகுத்தறிவு பகலவனே!