தமிழ்நாட்டில் மதுரை, தேனி, அரியலூர், கன்னியாகுமரி, கரூர், கடலூர், சீர்காழி, திருச்சி, நெல்லை, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தேர்வு காலம் என்பதால் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ”மத்திய தொகுப்பிலிருந்து வர வேண்டிய 750 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் தான் ஒரு சில மாவட்டங்களுக்கு முறையாக மின்சாரம் வழங்க முடியவில்லை என கூறினார். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, மின் உற்பத்தியை அதிகரித்து மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்” என விளக்கம் அளித்திருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலம் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் மின்வெட்டு பிரச்சனை புயலை கிளப்பும் விவகாரமாக மாறியுள்ளது. 2006 முதல் 2011 ஆண்டு வரை ஆட்சியிலிருந்த திமுக, அந்த காலகட்டங்களில் மின்வெட்டு அதிகமாக இருந்ததால் 2011 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக பேசப்பட்டது.
மீண்டும் அதே தவறை செய்வதாகவும், கோடை காலம் என்பதால் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு பரவலாக வருகிறது.
இதையும் படிங்க: பிரேக்கை அறிவித்த விஷ்ணு விஷால்! - ஏன் இந்த திடீர் முடிவு?