சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட ஒருவடத்திற்க மேல் ஆகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆவடி, உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சார்ந்த மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, அவர்கள் தரும் உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது உள்ளது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில், சென்னையில் முக்கிய இடமாக கருதும் அடையாற்றில் நரிக்குறவர்கள் வாழும் இடத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரிக்கை: சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில் ஜிப்சிகள் எனப்படும் தமிழ்நாட்டின் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
நகரின் மையப்பகுதியில் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
நரிக்குறவர் காலனியில் சுமார் 148 குடும்பம் வசித்து வருகிறது. இந்த பகுதியில், சுமார் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் ஆண், பெண் என இருபாலருக்கும் பொது கழிப்பிடம் உள்ளது.
கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாததால் அங்கு வசிக்கும் பெண்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு ஒன்றரை கிலோமீட்டருக்கு மேலாக தினமும் நடந்து சென்று வருகின்றனர். பாதள சாக்கடை அடைப்புகளை முறையாக சுத்தம் செய்யாததால் மழைகாலத்தில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
யாருக்கும் வேலை தருவதில்லை: தங்களுக்கு பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை, என வேதனை தெரிவித்தனர். இப்பகுதி மக்கள் சாலையோரத்தில் கிடைக்கும் பேப்பர், வாட்டர் கேன், இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
அதிலும் போதிய வருமானம் கிடைக்காததால், வேலைவாய்ப்பு தேடி வெளியே சென்றால், நரிக்குறவர் என்பதால் இவர்களுக்கு யாரும் வேலை தருவதில்லை. இதனால், பொறியியல் படித்த இளைஞர் ஒருவரும் இதேவேலை தான் செய்து வருகிறார். இதுதொடர்பாக, நரிக்குறவர் காலணி தலைவர் மனோகரன் கூறியதாவது,
அடிப்படை தேவைகள்: மெட்ரோ வாட்டர் (தண்ணீர்) நிரந்தரமாக கிடைக்க எங்கள் பகுதியில் டேங்க் வைக்க வேண்டும். வாரந்தோறும் நரிக்குறவர் காலனியை சுத்தம் செய்ய வேண்டும். அரசின் சலுகைகள் எங்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால், தற்காலிக சாதி சான்றிதழை, நிரந்த சாதி சான்றிதழாக மாற்றிதர வேண்டும். எங்கள் நரிக்குறவர் காலனியில் எங்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
வேலை இல்லாதவர்களுக்கு தொழில் செய்வதற்கு கடன் உதவி வழங்கிட வேண்டும். நரிக்குறவர் காலனி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு போலிஸ் பூத் அமைத்து தர வேண்டும். எங்களுக்கு நிரந்தர இருப்பிடம், கல்வி கற்க வசதி, சுய தொழில் செய்ய வழிமுறைகள் ஆகியவை இருந்தால் நாங்களும் சமுதாயத்தின் மற்ற பிரிவினரைப் போல் கல்வியிலும், தொழிலிலும் முன்னேறுவோம். முதலமைச்சர் ஸ்டாலின், எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி செய்ய வேண்டும்,என கோரிக்கை வைத்தார்.
சிறப்பு முகாம்: நரிக்குறவர் காலனியில் சிறப்பு முகாம் நடத்தி, நரிக்குறவர் நல வாரியம் மூலம் அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை , முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறுதல், பெயர் மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கர்ப்பிணிகளுக்கு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவப் பெட்டகம், ஊட்டச்சத்து பெட்டகம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
நிரந்த சாதி சான்றிதழ்: மேலும், நரிக்குறவர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். சமுக ஆர்வலர் எஸ்.பிரபா வாசுகி இது குறித்து கூறும் போது,
இந்த மக்களுக்காக 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த இடத்தை இவர்களுக்கு பிரித்து கொடுத்தது. அரசாங்கத்திடம் பட்டா வாங்கிக் கொள்ளுங்கள் என்று பல்கலைக்கழகம் சொல்லிவிட்டது. இங்கு வசிக்கும் 148 குடும்பங்களுக்கு பட்டாவிற்காக விண்ணப்பம் அளித்த நிலையில், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
தற்காலிக சாதி சான்றிதழை, நிரந்த சாதி சான்றிதழாக மாற்றிதர வேண்டும். தற்போது எம்பிசி ஜாதி சான்றிதழ் மட்டுமே தற்காலிக சான்றிதழாக வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு ST சான்றிதழ் வழங்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 18ம் ஆண்டு நினைவு நாள்! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி...