சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (நவ.6), வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர், “வரும் நவ.9ஆம் தேதியன்று வங்கக்கடலில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் தகவல் வந்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள் ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்குமாறும் சார்நிலை அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படவேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு அணைகளிலும், ஏரிகளிலும் நீர் இருப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக பல இடங்களில் இருப்பதால், பெய்து வரும் மழையுடன் கூடுதல் நீர் சேர்ந்து அணைகள் மற்றும் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கவனமாக கண்காணித்து, ஏரிகள் மற்றும் ஆறுகளின் கரையோரங்களையும் கண்காணித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டும்.
24 மணிநேரமும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணித்து, அதன் நீர் இருப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்கள் உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றையே நாம் வெற்றிகரமாக சந்தித்து விட்டோம். கொரோனா காலக்கட்டத்தில் நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நான் அறிவேன். தமிழ்நாடு வெற்றிகரமாக கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது குறித்து பிற மாநிலங்கள் பேசி வருகிறது. வெளிநாடுகளில் கூட புகழ்ந்து பேசக்கூடிய அளவிற்கு நாம் பணியாற்றி இருக்கிறோம். கரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், அனைவருடைய கூட்டு முயற்சி தான் இதற்கு காரணம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரோனாவை வென்றதைப் போல் இந்த பருவமழையும், புயலையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உங்கள் அனைவரும் ஒத்துழைப்பும் வேண்டும். வடகிழக்கு பருவமழையில் நாளது தேதி வரையிலான இயல்பான மழைப்பொழிவு 225.5 மி.மீ என்ற நிலையில், இன்று காலை நிலவரப்படி 317.59 மி.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 41 விழுக்காடு கூடுதல் ஆகும்.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டு ஜனவரி முதல் 06.11.2021 வரை இயல்பான மழையளவான 706.0 மி.மீ.-விட 37 விழுக்காடு கூடுதலாக 969.9 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 90 அணைகளில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, கரூர், திருப்பூர், அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 58 அணைகள் / நீர்த்தேக்கங்கள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது.
நீர் நிலைகள் விவரங்கள்
14138 ஏரிகளில், 7048 ஏரிகள், 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி (1726), மதுரை (939), தஞ்சாவூர் (550), புதுக்கோட்டை(510), திருவண்ணாமலை (378), சிவகங்கை (348), தென்காசி (346), திருநெல்வேலி (305), காஞ்சிபுரம் (257), செங்கல்பட்டு (248), ராணிப்பேட்டை (213), விழுப்புரம் (191), கள்ளக்குறிச்சி (147) கடலூர் (131), திருவள்ளூர் (124) மாவட்டங்களில் உள்ள ஏரிகள் 50 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளன.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
9-11-2021 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே, கண்காணிப்பு அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கவும் மாவட்ட ஆட்சியர்கள்;
அனைத்து ஆயத்த பணிகள், மீட்பு நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிவாரண முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்
குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலங்களில் தொற்று வியாதிகள், டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களிலும், சாலை ஒரத்திலும் உள்ள பலவீனமான மரங்களை கண்டறிந்து அப்புறப்படுத்துவதோடு ஆபத்தான நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடங்களில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள், சிறுபாலங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்புவதன் காரணமாக இந்த பாலங்கள், சிறுபாலங்கள் மீது மழை, வெள்ள நீர் ஓடும் போது, இந்த வழியாக போக்குவரத்தை அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் அனுமதிக்க வேண்டும். நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் வடிகால்களின் கரைகள் உறுதியாக உள்ளனவா என்பதையும் அவை சேதமடையாமல் இருப்பதையும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை, வெள்ள நீரை வெளியேற்றிட பொதுப்பணித்துறை (நீர்வளம்), வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் ஊராட்சிகளின் அலுவலர்கள் உறுதி செய்து, பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும். மண் சுவர் வீடுகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும், மாவட்ட நிருவாகம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்கும் வகையில் சாலைகளிலுள்ள சேதங்கள் மற்றும் பள்ளம் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள், அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு நிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நீர்நிலைகளின் நீர் வரத்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த, பெய்யும் மழை அளவு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து தேவையான அளவு உபரி நீரை பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, உபரி நீர் திறப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றி அவ்வப்போது உபரி நீரை திறந்துவிட்டு, அணைகள், நீர்த்ததேக்கங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பு பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
முக்கிய ஆவணங்களை பாதுகாக்க உத்தரவு
விவசாயிகளைப் பொருத்தவரையில்; வயல்வெளிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய நிலங்களில் விழும் நிலையில் உள்ள மரங்கள்/மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும். புயல், வெள்ள காலங்களில், தென்னந்தோப்புகளில் உள்ள மரங்களிலிருந்து முதிர்ந்த நிலையில் உள்ள தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்.
தென்னை மரங்களிலிருந்து தாழ்ந்த மட்டைகளை அகற்ற வேண்டும். தென்னை மரங்களைச் சுற்றி அதிக அளவில் மண் சேர்த்து வைக்க வேண்டும். பொதுமக்களைப் பொருத்தவரையில்; தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு பொதுமக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு - மரங்கள் வெட்ட அனுமதி - கேரளாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி