நாட்டின் 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதிசெய்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவருகின்றன. அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகளும் நேற்று ஒரேநாளில் தங்களது வேட்பாளர் பட்டியலைஅறிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறஇருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கஇருக்கிறது. நாளை தொடங்க இருக்கும் வேட்பு மனு தாக்கல் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களில் காவல் துறையினருடன் பாதுகாப்புப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியே இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான வேட்பு மனு தாக்கலும் நாளை தொடங்கஇருக்கிறது. இதனால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
இதற்கிடையே ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற இருக்கும் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.