அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டிலான 47 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு 12 மணிக்கு தான் தொடங்கப்பட்டது. பின்னர் ஏற்கனவே கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கான மறு ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
ஆனால், கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யாமல் காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ள மாணவர்களை, தற்போது வரை கலந்தாய்விற்கு அழைக்கவில்லை எனக்கூறி பெற்றோரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கலந்தாய்வில் பங்கேற்க தர்மபுரியிலிருந்து வந்த மாணவி ஒருவர் கூறும்போது, ”அரசு பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் கடந்த முறை நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. கட்டணம் குறித்து அரசு காலதாமதமாக அறிவித்ததால் அந்த கல்லூரியில் சேர முடியவில்லை. எனவே, தற்போது நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வந்துள்ளேன். ஆனால் இதுவரை எங்களை கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கவில்லை” எனக் கூறினார்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து காத்திருப்பு அறையில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது!